search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ்கள்"

    வடபாதிமங்கலம் மற்றும் மன்னார்குடி வழித்தடத்தில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கூத்தாநல்லூர்:

    திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம், புள்ளமங்கலம், சேந்தங்குடி, பாலக்குறிச்சி, அரிச்சந்திரபுரம், புனவாசல், பழையனூர், நாகங்குடி, காடுவெட்டி, பண்டுதக்குடி, கொத்தங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு மன்னார்குடி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், புள்ளமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர்.

    இவ்வாறு செல்லும் மாணவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் தனியார் பஸ்களில் செல்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மாணவர்கள் கூறியதாவது:-  வடபாதிமங்கலத்தில் இருந்து கூத்தாநல்லூர் வழியாக மன்னார்குடி வரை காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்கள் குறைவாக தான் இயக்கப்படுகின்றன. ஆதலால் தினமும் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், மன்னார்குடி, புள்ளமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

    இதனால் மாணவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டும், படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டும் செல்லக்கூடிய நிலை உள்ளது. மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் மாணவர்கள் அவதியுறுகின்றனர்.

    வடபாதிமங்கலம்-மன்னார்குடி வழித்தடத்தில் காலையில் 7 மணியிலிருந்து 9.30 மணி வரை 2 அரசு பஸ்களும், அதேபோல் மாலையில் 4 மணியில் இருந்து 6 மணி வரையிலும் 2 அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே மேற்கண்ட வழித்தடத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் கூடுதலாக அரசு பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து பெங்களூருக்கு பஸ்கள் இன்று ஓடவில்லை. #BharatBandh
    ஓசூர்:

    சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் மார்த்தாண்டம், கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்ட தமிழக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இன்று அதிகாலை 2 மணியுடன் ஓசூரிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. கிட்டத்தட்ட 270 அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    இதேபோல ஓசூரில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் தமிழக அரசு பஸ்கள் தமிழக எல்லை வரை மட்டுமே சென்று வந்தன. பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு இயக்கப்பட்ட கர்நாடக அரசு பஸ்கள் இன்று காலை கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்பட்டன.

    ஓசூரில் இருந்து வழக்கமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அத்திப்பள்ளி, சர்ஜியாபுரம், மாலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டவுன் பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்கள் ஓசூர் அருகே தமிழக எல்லை வரை மட்டுமே சென்று வருகின்றன.

    ஓசூரில் இருந்து சாய்பாபா ஆசிரமம் உள்ள புட்டபர்த்திக்கு இன்று காலை அரசு பஸ் இயக்கப்படவில்லை.

    பெங்களூருவில் வாடகை அதிகம் என்பதால் ஏராளமான தொழிலாளர்கள் ஓசூரில் தங்கி இருந்து பஸ் மற்றும் ரெயில் மூலம் பெங்களூரு சென்று வேலை பார்த்தனர். இன்று வேலைநிறுத்தம்  காரணமாக பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் விடுமுறை எடுத்துவிட்டனர்.

    தருமபுரி-பெங்களூரு, ஓசூர்-பெங்களூரு, சேலம்-பெங்களூரு பயணிகள் ரெயிலிலும், நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் இன்று காலை பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    இன்று காலை ஓசூரில் இருந்து தனியார் சுற்றுலா பஸ்கள் மற்றும் வேன்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெங்களூருக்கு சென்றனர்.  #BharatBandh

    கர்நாடகத்தில் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக இன்று பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. #BharatBandh
    பெங்களூரு:

    தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் காரணமாக கர்நாடகத்தில் இன்று பெரிய அளவில் பாதிப்பு இல்லை. பெங்களூருவில் இருந்து 2,543 ஊர்களுக்கு வழக்கமாக 3,300 பஸ்கள் இயக்கப்படும்.

    இன்று தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் 1,104 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்த பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. பயணிகள் ரெயிலும், மெட்ரோ ரெயிலும் இயக்கப்பட்டது.

    வேலைநிறுத்தம்  காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    இதேபோல பெங்களூரு பல்கலைக்கழகம் உள்பட மாநிலத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பெங்களூரு நகரில் ஆட்டோ, டாக்சிகள் இன்று வழக்கம்போல் ஓடின. தபால் மற்றும் வங்கி அலுவலகங்கள் திறந்து இருந்தாலும் ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. இதேபோல கர்நாடக அரசு அலுவலகங்கள் திறந்து இருந்தன. ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

    வேலை நிறுத்தத்துக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை ஆதரவு தெரிவித்து இருந்தது. இதனால் இன்று சினிமா ஷூட்டிங் நடைபெறவில்லை.

    கர்நாடக மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இன்று வேலைநிறுத்தம் காரணமாக 10 ஆயிரத்துக்கும் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன.

    பெங்களூரு, மைசூரு உள்பட மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். #BharatBandh
    டீசல் நஷ்டத்தை சரிகட்ட வெளியூர்களுக்கு செல்லும் சாதாரண பஸ்களுக்கு டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    சென்னை:

    தினமும் அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்து கழகங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. ஜனவரி மாதம் 20-ந்தேதி ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.62.94 ஆக இருந்தது.

    இன்று ஒரு லிட்டர் ரூ.79.50 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு ஒரு லிட்டர் டீசல் ரூ.17 வரை உயர்ந்துள்ளது.

    இதனால் அரசு போக்குவரத்து கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. ஏற்கனவே பஸ் கட்டண உயர்வால் பயணிகள் கூட்டம் குறைந்து வருவாய் குறைந்து இருந்த நிலையில் இப்போது வரலாறு காணாத டீசல் விலை உயர்வால் கடும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன.

    இந்த இழப்பை சரிகட்டுவதற்காக வெளியூர்களுக்கு செல்லும் அரசு பஸ்களின் கட்டணம் மறைமுகமாக மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் தவிர விழுப்புரம், கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம் ஆகிய 6 போக்குவரத்து கழகங்கள் மூலமாக இயக்கப்படும் சுமார் 2500 சாதாரண பஸ்களின் கட்டணம் எக்ஸ்பிரஸ் மற்றும் டீலக்ஸ் கட்டணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சாதாரண பஸ் கட்டணம் கிலோ மீட்டருக்கு 58 பைசா எனவும், எக்ஸ்பிரஸ் கட்டணம் கிலோ மீட்டருக்கு 85 பைசாவும் அரசு நிர்ணயித்துள்ளது. வெளியூர்களுக்கு 6850 புறநகர் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதுதவிர 2500 சாதாரண பஸ்களும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. சாதாரண கட்டணத்தில் இயக்கப்பட்டு வந்த இந்த பஸ்கள் எக்ஸ்பிரஸ் கட்டணத்திற்கு (வழித் தடத்திற்கு) மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் தற்போது சாதாரண பஸ்கள் அனைத்திலும் டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சாதாரண பஸ் கட்டணம் ரூ.120 ஆகும். தற்போது இந்த பஸ்கள் டீலக்ஸ் ஆக மாற்றப்பட்டதால் ரூ.175 கட்டணமும், அல்ட்ரா டீலக்ஸ் கட்டணமாக ரூ.200 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

    அரசு பஸ்களில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து காஞ்சீபுரம், விழுப்புரம், புதுச்சேரி, ஆற்காடு, சேலம், தர்மபுரி, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் தற்போது பயணிகள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

    மேலும் பூந்தமல்லியில் இருந்து வேலூருக்கு செல்லும் அரசு பஸ்களில் பயணம் செய்தால் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்தாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பூந்தமல்லி- வேலூருக்கு ரூ.100 கட்டணமாகும். கோயம்பேடு- வேலூர் டிக்கெட் கட்டணம் ரூ.125 வசூலிக்கப்படுகிறது. எந்த இடத்தில் இருந்து பயணம் செய்கிறோமோ அதற்குதான் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் பயணம் செய்யாத இடத்திற்கும் சேர்த்து அதிகமாக கட்டணம் வசூலிப்பது ஏழை மக்களை வதைக்கும் செயல் என்று தெரிவிக்கின்றனர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டக்டர் இல்லாமல் டிரைவர்களை மட்டும் வைத்து பஸ்களை கடந்த சில மாதங்களாக இயக்கி வருகின்றனர். குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நின்று செல்லும் இந்த பஸ்களில் டிரைவரே டிக்கெட் கொடுத்து விடுவார்.

    இந்த திட்டத்திற்கு பயணிகளிடம் வரவேற்பு இல்லாததால் விலக்கி கொள்ளப்படுகிறது. சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட கண்டக்டர் இல்லாத பஸ் சேவை தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. #Tamilnews
    தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்று திரும்புபவர்களுக்காக 22 ஆயிரம் அரசு பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #TNMinister #MRVijayabaskar
    சென்னை:

    ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை கே.கே.நகர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் தொழில் துறையில் முன்னணியில் இருப்பதால் இந்திய அளவில் வாகன எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இதனால் விபத்துக்களை குறைப்பதற்கு போக்குவரத்து துறை முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

    தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள் விட ஏற்பாடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டம் நடத்த இன்னும் நேரம் உள்ளது. ஏற்கனவே தீபாவளி, பொங்கல் பண்டிகையையொட்டி பொது மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏற்பாடுகளை செய்து கொடுத்தோம். அது வழக்கமான வேலைதான்.

    தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்று திரும்புபவர்களுக்காக 22 ஆயிரம் அரசு பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


    சாலை விபத்தில் வருடத்துக்கு 17 ஆயிரம் பேர் இறப்பதாக புள்ளி விவரம் இருக்கின்றது. சாலை விதிகளை அனைவரும் முறையாக கடைபிடிக்க வேண்டும். காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்கும், மின்சார வாகனங்களை கொண்டு வருவதற்காகவும் நான் அமெரிக்கா மற்றும் லண்டனுக்கு சென்றிருந்தேன். அங்கு சாலை விதிகளை ஒவ்வொருவரும் கடைபிடிப்பதை பார்த்தால் நமது நாட்டில் மிக மிக குறைவு.

    அந்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு வர வேண்டும். எனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாடத்திட்டத்தில் அது சேர்க்கப்பட்டுள்ளது.

    சாலைகள் நல்ல சாலைகளாக இருப்பதால் வாகனங்கள் வேகமாக செல்லும் போது விபத்துகள் நடக்கின்றன. விபத்துக்களை குறைக்க இனிவரும் காலங்களில் அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கும்.

    அடுத்த வாரம் 475 புதிய பேருந்துகளை முதல்- அமைச்சர் தொடங்கி வைக்கிறார். 100 மின்சார பஸ்களை வாங்க நாங்கள் லண்டன் சென்றிருந்தோம். அதில் 80 பஸ்களை சென்னையிலும், 20 பஸ்களை கோவையிலும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மின்சார பஸ்கள் சென்னையில் இயக்கப்படும்.

    பஸ் கட்டண உயர்வை மக்கள் தலையில் சுமத்த அரசு தயாராக இல்லை. டீசல் விலை உயர்வு அரசு போக்குவரத்து துறைக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்ட பிறகு சென்னையில் கூடுதலாக 300 பஸ்களை விட்டுள்ளோம்.

    இது மக்களின் பயணத்துக்கு போதுமாக இருக்கும் என்று கருதகிறோம். தேவைப்பட்டால் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.

    விரைவில் போக்குவரத் துறையையும், மெட்ரோ ரெயில் சேவையையும் இணைத்து கார்டு சிஸ்டம் கொண்டு வர உள்ளோம். அது மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். தமிழகம் முழுவதும் உள்ள பஸ்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தி பஸ் எப்போது வரும் என்பதை ‘ஆப்’ மூலம் தெரிந்து கொள்வதற்கான முயற்சிகளை எடுத்துள்ளோம். போக்குவரத்து துறையில் உள்ள காலி இடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #MRVijayabaskar
    நெல்லை அருகே கருணாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து 3 அரசு பஸ்கள் மீது நள்ளிரவில் கற்கள் வீசப்பட்டதில் 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.
    களக்காடு:

    முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வரும் கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த 16-ந்தேதி சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதில் பேசிய போது, முதலமைச்சர் மற்றும் போலீசாரை தாக்கி பேசினார். மேலும் சாதி மோதல் ஏற்படுத்தும் விதமாக பேசியதால் அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக கொலை முயற்சி, 2 சமூகத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசியது, கலவரத்தை தூண்டும் வகையில் அவதூறு பரப்பியது உள்ளிட்ட 8 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கருணாஸ் கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் அசம்பாவித நடவடிக்கைகளில் ஈடுபடாதவாறு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    நெல்லை மாவட்டத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. நாங்குநேரி, சீவலப்பேரி, தாழையூத்து, பனவடலி சத்திரம், கடையநல்லூர், நெல்லை சந்திப்பு, சி.என்.கிராமம், சுத்தமல்லி பகுதியில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டனர். மேலும் அந்த பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றியும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கருணாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லை அருகே நேற்று நள்ளிரவு 3 அரசு பஸ்கள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர். இதில் அந்த பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும் 2 பெண் பயணிகள் காயம் அடைந்தனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் வந்து கொண்டி \ருந்தது. நள்ளிரவு 11 மணிக்கு அந்த பஸ் நாங்குநேரி அருகே உள்ள நம்பிநகர் பகுதியில் வந்தது. அப்போது இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென அந்த பஸ் மீது கற்களை வீசி தாக்கினர்.

    இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதில் அந்த பஸ்சில் பயணம் செய்த பாளை மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளத்தை சேர்ந்த சொர்ணக்கிளி என்பவரின் மனைவி பாலம்மாள் (வயது65) என்பவர் படுகாயம் அடைந்தார்.

    இதே போல் திசையன்விளையில் இருந்து நெல்லை நோக்கி நேற்றிரவு வந்த மற்றொரு அரசு பஸ் மீதும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். நாங்குநேரி அருகே தட்டான் குளம் பகுதியில் பஸ் வந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

    இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்ததில், அதில் பயணம் செய்து வந்த நெல்லை புதுப்பேட்டையை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி விஜயலட்சுமி (37) என்பவர் படுகாயம் அடைந்தார்.

    இந்த சம்பவங்கள் குறித்து பஸ் டிரைவர்கள் நாங்குநேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கல்வீச்சில் காயமடைந்த விஜயலட்சுமி, பாலம்மாள் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக நாகர்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்ற அரசு பஸ் மீது வள்ளியூர் அருகே கோவநேரி பகுதியில் மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கிய போதும், அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இந்த 3 கல்வீச்சு சம்பவங்கள் குறித்தும் நாங்குநேரி மற்றும் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கல்வீசி தாக்கிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்தம் சம்பவம் நாங்குநேரி, வள்ளியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரசு பஸ்களை கூடுதலாக இயக்கக்கோரி உளுந்தூர்பேட்டையில் கல்லூரி மாணவ- மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செங்குறிச்சி, பாதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்து கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அரசு பஸ்கள் மூலம் விருத்தாசலம் கலைக்கல்லூரிக்கு சென்று வந்தனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் சரிவர அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கல்லூரி மாணவர்கள் பலமுறை புகார் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்தநிலையில் இன்று காலை உளுந்தூர்பேட்டை பஸ்நிறுத்தத்தில் விருத்தாசலம் கல்லூரிக்கு செல்வதற்காக 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். ஆனால் அரசு பஸ்கள் எதுவும் அந்த வழியாக வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் உளுந்தூர்பேட்டை பஸ்நிறுத்தம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லமுடியாமல் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உளுந்தூர்பேட்டை பஸ்நிறுத்தம் வழியாக விருத்தாசலத்துக்கு அரசு பஸ்களை முறையாக இயக்க வேண்டும். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் செல்வதற்கு வசதியாக அரசு பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அதற்கு போலீசார் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Tamilnews
    சாணார்பட்டி அருகே மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பயன்படாத நேரத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி அருகில் உள்ள அஞ்சுகுழிபட்டி ஊராட்சிக்குட்பட்ட படுகை காட்டூர், சின்னகாளிபட்டி, குட்டுகாட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் கூலித்தொழிலாளர்கள்.

    திண்டுக்கல், நத்தம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்புகின்றனர். மேலும் இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் சாணார்பட்டி மற்றும் கோபால்பட்டிக்கு பள்ளிக்கு செல்கின்றனர். இந்த வழித்தடத்தில் காலையில் 10 மணிக்கும், இரவு 8.30 மணிக்கும் அரசு பஸ் வந்து செல்கிறது.

    இதனால் இந்த பஸ் சேவை இப்பகுதி கிராம மக்களுக்கும், மாணவர்களுக்கும் பயன் அற்றதாக உள்ளது. காலையில் 8 மணிக்கும், மாலையில் 5 மணிக்கும் பஸ் இயக்கப்பட்டால் பள்ளிக்கு செல்பவர்களுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது காலை நேரத்தில் தாமதமாக பஸ் இயக்கப்படுவதால் 6 கி.மீ. தூரம் நடந்து மாணவர்கள் அஞ்சுகுழிபட்டியில் வந்து பஸ் ஏறி செல்கின்றனர்.

    எனவே போக்குவரத்து கழக அதிகாரிகள் இப்பகுதி கிராம மக்களின் நிலைமையை உணர்ந்து காலையில் 8 மணிக்கும், மாலையில் 5 முதல் 6 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    கும்பகோணத்தில் நள்ளிரவில் 3 அரசு பஸ்கள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கும்பகோணம்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியானார்கள்.

    துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் போராட்டம் பெரிய அளவில் வெடித்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இருந்த போதிலும் போராட்டக் காரர்கள் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக ஒரு அரசு விரைவு பஸ் சென்னைக்கு சென்றது. அப்போது அந்த பஸ் கும்பகோணம் அடுத்துள்ள சுந்தர பெருமாள் கோவில் பகுதியில் நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்த போது அங்கு மறைந்து இருந்த மர்ம நபர்கள் சிலர் பஸ்சின் கண்ணாடி மீது கற்களை வீசி தாக்கினர்.

    இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதமானது. உடனே பஸ் டிரைவர் இது குறித்து கும்பகோணம் போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டு பஸ்சை அங்கிருந்து எடுத்து சென்றார். இந்த சம்பவத்தால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது போன்று பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை பகுதியில் அரசு விரைவு பஸ் ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் அந்த பஸ்சின் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் பஸ்சின் இடதுபுறம் உள்ள கண்ணாடிகள் உடைந்தது.

    இதைத் தொடர்ந்து நாச்சியார் கோவில் அருகே உள்ள நரசிங்கபேட்டை பகுதியில் சென்ற அரசுபஸ் மீதும் மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவு கற்களை வீசியுள்ளனர். இதில் அந்த பஸ்சின் கண்ணாடியும் சேதமானது.

    கும்பகோணம் பகுதியில் நேற்று நள்ளிரவு மட்டுமே 3 அரசு பஸ்கள் மீது தாக்குதல் நடந்திருப்பது தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அந்தந்த சரகத்திற்குட்பட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பஸ்கள் மீது தாக்குதல் நடந்த இடத்தில் வைக்கப் பட்டிருக்கம் சி.சி.டி.வி. பதிவுகளை வைத்து போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 3 இடங்களிலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் தான் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவிலில் 2 அரசு பஸ்கள் மீது கல்வீசி உடைக்கப்பட்டன. இந்த சம்பவங்கள் குறித்தும் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவத்தை கண்டித்து குமரி மாவட்டத்தில் போராட்டங்கள் வலுத்துள்ளது. இதன் காரணமாக குமரி கடலோர கிராமங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்து விடிய, விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சோதனைச் சாவடிகளிலும் இரவு-பகலாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    போலீசாரின் கண்காணிப்பையும் மீறி நேற்று இரவு நாகர்கோவிலில் 2 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து நேற்று இரவு கன்னியாகுமரி நோக்கி அரசு பஸ் பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. கரியமாணிக்கபுரத்தை கடந்து ஆனைப்பாலம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது.

    அப்போது மர்ம நபர்கள் பஸ் மீது கற்களை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் அந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. இதுபற்றி பஸ் டிரைவர் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் மாற்றுப்பஸ்களில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதேபோல நள்ளிரவு கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த மற்றொரு அரசு பஸ் மீதும் கரியமாணிக்கபுரம் பகுதியில் கல்வீசி தாக்கப்பட்டது. அந்த பஸ்சின் முன் பக்க கண்ணாடிகளும் சேதம் அடைந்தன.

    இந்த சம்பவங்கள் குறித்தும் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்வீச்சில் ஈடுபட்டது ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பஸ்கள் மீது கல்வீசப்பட்டதன் எதிரொலியாக கிராமப் புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

    மேலும் நாகர்கோவிலில் இருந்து அஞ்சுகிராமம், உவரி வழியாக திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடிக்கு இயக்கப்படும் பஸ்கள் இன்று 2-வது நாளாக இயக்கப்படவில்லை.
    ×